கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை – பழனிசாமி குற்றச்சாட்டு!!

சென்னை:
சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவல்துறை பாதுகாப்பு அளிக்காத காரணத்தால், அரசின் அலட்சியத்தால் கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூரில் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் பேச ஆரம்பித்த 10 நிமிடங்களில் செருப்பு வீசப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்று திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பரப்புரை நடத்த வேலுச்சாமிபுரத்தை அரசு வழங்கியிருக்கிறது.

அதேபோல் முன்பு காவல்துறை ஏடிஜிபி, தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், பாதுகாப்பு பணியில் 500 போலீஸார் ஈடுபட்டதாக தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு சட்டப்பேரவையில் 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் காவலர்களின் எண்ணிக்கையிலேயே முரண் இருக்கிறது.

மேலும் தொலைக்காட்சி வழியாக பார்த்தபோது அந்த கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை.

அது தெளிவாகவே தெரிகிறது. அதேபோல் அடுத்த நாள் காலை 8 மணிக்கு நான் கரூர் சென்றபோது 31 பேருக்கு உடற்கூராய்வு முடிந்துவிட்டது. எப்படி அவ்வளவு விரைவாக உடற்கூராய்வு செய்ய முடியும்?

எதற்காக வேகமாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்? இதெல்லாம் உண்மை சம்பவத்தை மறைக்க நடத்தப்படும் நாடகமாகும்.

இந்த கூட்டத்துக்கு முழுமையாக பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இத்தனை உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். இச்சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பிரதான எதிர்கட்சியான அதிமுக பேசிய பிறகு முதல்வர் பதில் சொல்லியிருந்தால் பரவாயில்லை.

ஆனால் எனக்கு அந்த வாய்ப்பை கொடுக்க மறுத்துவிட்டு, முதல்வர் தானே என்னென்ன நடவடிக்கைகளை எடுத்ததாக பேசுகிறார்.

ஏன் இந்த பதற்றம் அவருக்கு? எனில் இவ்விவகாரத்தில் எதோ உள்நோக்கம் இருக்கிறது. சிபிஐ விசாரணையை நினைத்து ஆளுங்கட்சி பயப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *