சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் பெர்த்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் அரங்கேறிய முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் 7 மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிய நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து விளையாடுவதை இந்த ஆஸ்திரேலிய தொடர்தான் தீர்மானிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேடியில், “இந்த விளையாட்டில் அனைத்தையும் சாதித்து விட்டேன் என்று யாரும் சொல்வதை கேட்க எனக்கு பிடிக்காது.
இப்போதே நீங்கள் 2027-ம் ஆண்டு உலகக்கோப்பையை அடைய முயற்சி செய்யாமல் சில குறுகிய கால இலக்குகளை கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி எப்போதும் அதிக ஊக்கம் கொண்டவராக இருந்து வருகிறார்.
கோலி, ரோகித் பற்றி நமக்கு தெரிந்தது எல்லாம் அவர்கள் சிறந்த வீரர்கள் என்பதுதான்.
நிச்சயமாக அவர்கள் சிறந்த வீரர்களே. அவர்கள் சிறந்த இந்திய அணியில் உள்ளனர்.
ஆனால் இப்போது முதல் உலகக்கோப்பை வரை அவர்களால் தங்களது சிறந்த திறனை கண்டிபிடிக்க முடியுமா? என்பதற்கான பதில் குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த ஆஸ்திரேலிய தொடர்தான்” என்று கூறினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நாளை நடக்கிறது.