எந்த அளவிற்கு மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்வதற்கு நம்முடைய அரசு தயாராக இருக்கின்றது – உதயநிதி ஸ்டாலின் !!

சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டலம் வியாசர்பாடி பகுதி அம்பேத்கர் கல்லூரியில் வியாசர்பாடி கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் அது குறித்த புகைப்பட விளக்க காட்சியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

தொடர்ந்து வியாசர்பாடி பகுதி கேப்டன் காட்டன் கால்வாயில் 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொக்லைன் மற்றும் மிதக்கும் பொக்லைன் இயந்திரம் கொண்டு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை டான்பாஸ்கோ பள்ளி அருகில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட வியாசர்பாடி பகுதி கொடுங்கையூர் கால்வாயில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் குட்செட் குளம் அகலப்படுத்தி, ஆழப்படுத்திடும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூர்வாரும் பணிகளை தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

பின்னர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகியுள்ளது. நாளை புயல் கரையை கடக்கும் என்று எதிர் பார்க்கின்றோம். அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த புயல் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்புகள் இல்லாமல், ஆந்திராவை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும், வடசென்னை பகுதி, திருவள்ளுர் பகுதிகளில் 5 முதல் 8 செ.மீ வரை மழை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் நமக்கு தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை எல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

வடசென்னையை பொறுத்தவரைக்கும் இதுவரை 18 கால்வாய்கள், 13 குளங்கள் சென்னை மாநகராட்சி மூலமாக தூர்வாரப்பட்டிருக்கிறது. மொத்தம் 331 கி.மீ நீளம் கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கிறது. 3.50 லட்சம் டன் கழிவுகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னெச்செரிக்கை ஏற்பாடுகளை எல்லாம் துரிதப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலுன் சொல்லியிருக்கின்றார். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அளிக்கின்ற புகார்களை உடனடியாக கவனிக்க சொல்லியிருக்கின்றார்.

அதன்பேரில் தான் இன்றைக்கு வந்து இந்த வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லூரி, கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் ஆகியவற்றில் எல்லாம் இன்றைக்கு ஆய்வு செய்துள்ளேன்.


அடுத்த 10 நாட்களுக்கு மிகப்பெரிய மழை இருக்காது என்று வானிலை மையம் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆனால், எந்த அளவிற்கு மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்வதற்கு முதல்-அமைச்சர் தலைமையிலான, நம்முடைய அரசு தயாராக இருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *