புதுடெல்லி:
இந்திய ராணுவம் எப்போதும் போர் சூழலுக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான் உடன் நடைபெற்ற நான்கு நாள் ராணுவ மோதல் எல்லைகளில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதை நமக்கு கோடிட்டு காட்டியுள்ளது. இந்த சம்பவம் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு போர் போன்ற சூழ்நிலைக்கு எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு இந்தியா உறுதியான பதிலடியை தந்தது. இருந்தபோதிலும் தேசிய பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் திட்டமிடலுக்கும், எதிர்கால நடவடிக்கையை கற்றுக்கொள்வதற்கும் இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது.
மே 7 முதல் 10 வரை மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ உபகரணங்களை நாம் திறம்பட பயன்படுத்தியது, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியது.
ஆபரேஷன் சிந்தூர் சம்பவமானது நமது எல்லைகளில், எங்கும், எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நமக்கு நினைவுபடுத்தியுள்ளது.
எந்த நேரத்திலும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க நாம் நமது சொந்த அடித்தள கட்டமைப்பை மட்டுமே நம்பியிருக்க வேண்டும்.
தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஒவ்வொரு களத்தையும் ஆழமாக மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. சவால்களை சமாளிக்க சுதேசிமயமாக்கல் மட்டுமே ஒரே வழி.
உலக ஒழுங்கு கட்டமைப்பு பலவீனமடைந்து வருகிறது. பிராந்திய பகுதிகளில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் வியூகத்தை மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாகிறது.
சிந்தூர் நடவடிக்கையின்போது, ஆகாஷ் ஏவுகணை, பிரம்மோஸ், ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் இன்னும் பிற உள்நாட்டு உபகரணங்களின் சக்தியை உலகம் கண்டு வியந்தது. இதற்கான பெருமை அனைத்தும் நமது ராணுவத்தையே சாரும்.
பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், உள்நாட்டு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அரசு ஒரு சமமான களத்தை உருவாக்கி வருகிறது.
இந்த வாய்ப்பை தொழில்துறையினர் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.