தூத்துக்குடி
சமூகநலத்துறை வழியாக குழந்தைகள், மாணவிகள் மற்றும் மகளிர் நலனுக்காக தமிழக அரசு நிறைவேற்றிய சாதனைகள் குறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சமூக நலத்துறை வழியாக மகளிர், குழந்தைகள், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்கள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் “புதுமைப் பெண்” உயர்கல்வி உறுதித் திட்டம் மூலம் 2022–2023 முதல் தொடங்கி இதுவரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கற்கும் 5,29,728 மாணவிகள் மாதம் ரூ.1,000 வீதம் பெறுகின்றனர்.
அதேபோல் “தமிழ்ப்புதல்வன்” திட்டம் மூலம் 2024–2025 கல்வியாண்டில் தொடங்கி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6- முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதுவரை 3,92,449 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டங்கள் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் 75,000 குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் மாணவிகளுக்கான விடுதி வசதிகள் மொத்தம் 19 “தோழி” விடுதிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும் 3 விடுதிகள் புனரமைப்பில் இருக்க, 26 புதிய விடுதிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
போக்சோ வழக்குகளில் நிவாரணமாக பாதிக்கப்பட்ட 6,999 நபர்களுக்கு ரூ.103.62 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. திருமண நிதியுதவி திட்டங்கள் மூலம் 2021 முதல் 2025க்குள் ரூ.1,174 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,39,609 பயனாளிகள் தங்க நாணய நிதியுதவி பெற்றுள்ளனர்.
சுயதொழில் மானியமாக 811 பேருக்கு ரூ.4 கோடி வழங்கப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதைய பயனாளிகள் 1,760 பேர் ஆவர். 2022 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் 34,987 பள்ளிகள் இணைக்கப்பட்டு சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்காக 2025 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் 6,910 குழந்தைகள் மாதம் ரூ.2,000 பெறுகின்றனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த 402 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்பட்டு மாதம் ரூ.3,000 வழங்கப்படுகிறது. மேலும் 15,364 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால், குடிநீர், திடக்கழிவு, கழிப்பிடங்கள், நகர் நல மையங்கள், சாலைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. 2025-2026-ல் 1,042 பணிகளுக்கு ரூ.73.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 12 கோடி மதிப்பில் 107 பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
2025-2026-ல் 3 கோடியில் 35 பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கிய வளர்ச்சி பணிகள் 110 கோடி மதிப்பில் சிறப்பு மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. மினி டைடல் பார்க், வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. மாநகரம் முழுவதும் 650 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.ஆர்.ஐ. இயந்திரம், ஆர்.ஓ. பிளான்ட், வாட்டர் ஹீட்டர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10 பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டு நிறுவப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.930 கோடியில் நடைமுறையில் உள்ளது. விவசாயம் மற்றும் நீர்வள மேம்பாடு உப்பாத்து, முள்ளக்காடு, செங்குளம் உள்ளிட்ட ஓடைகள் தூர்வாரப்பட்டு நீர்வழி சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் கோவில் மேம்பாடு கடல்சார் விளையாட்டு மையத்துக்கு ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கோவில்களில் திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி. மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி.
உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்வு. டீசல் மற்றும் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. 3,000 கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனரமைப்பு. முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை. தொழிலாளர் நல வாரியங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.
முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை. நகர்புற குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா. வியாபாரிகளுக்கு இரவு 10 மணிக்குப் பின் வணிக அனுமதி. தூத்துக்குடி சாலைக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்பட்டது.
ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் சமூக நலத்துறை வழியாகவும், மாவட்ட அடிப்படை கட்டமைப்புகள் வழியாகவும் தூத்துக்குடி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது பெருமைமிகு சாதனையாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.