மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 மருத்துவப் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர் – சென்னை மாநகராட்சி தகவல்!!

சென்னை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு 17-ந்தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் வாயிலாக 36,353 மருத்துவப் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மூலமாக பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாதவண்ணம் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்ட இடங்களில் உடனடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துதல் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பொது மக்களுக்கு நோய்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 முதல் 28.10.2025 வரை 627 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 36,353 மருத்துவப் பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், இன்று திருவொற்றியூர் மண்டலத்தில் 3 முகாம்கள், மணலி மண்டலத்தில் 3 முகாம்கள், மாதாவரம் மண்டலத்தில் 3 முகாம்கள், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 4 முகாம்கள், ராயபுரம் மண்டலத்தில் 3 முகாம்கள், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 9 முகாம்கள், அம்பத்தூர் மண்டலத்தில் 10 முகாம்கள், அண்ணாநகர் மண்டலத்தில் 21 முகாம்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 3 முகாம்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 9 முகாம்கள், வளசரவாக்கம் மண்டலத்தில் 3 முகாம்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 12 முகாம்கள், அடையார் மண்டலத்தில் 13 முகாம்கள், பெருங்குடி மண்டலத்தில் 11 முகாம்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 9 முகாம்கள் என 116 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

மழைக்கால மருத்துவச்சிறப்பு முகாம்கள் வாயிலாக பெரும்பாலான மருத்துவ பயனாளர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *