இந்திய கடல்சார் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!!

மும்பை,
இந்திய கடல்சார் வாரம் என்ற 5 நாள் சர்வதேச மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 27-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில், 85-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பதோடு, 350-க்கும் மேற்பட்ட சர்வதேச பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று கருத்துகளை வழங்குகின்றனர்.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இதற்காக மும்பையில் உள்ள பம்பாய் கண்காட்சி மையத்திற்கு வரும் அவர், மாலை 4 மணியளவில் நடைபெறும் கடல்சார் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுவார்.

அதைத் தொடர்ந்து அங்கு நடக்கும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகளின் கூட்டமைப்பு கூட்டத்திற்கும் அவர் தலைமையேற்பார்.

உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாகிகள் கூட்டமைப்பு, சர்வதேச கடல்சார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பெரும் முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சர்வதேச கடல்சார் பங்களிப்பாளர்களை ஒருங்கிணைத்து, கடல்சார் சூழலமைப்பின் எதிர்காலம் குறித்த விவாதம் நடைபெறும்.


மேலும், நிலையான கடல்சார் வளர்ச்சி, திறமையான வினியோகம், பசுமை கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய நீலப்பொருளாதார யுக்திகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

மும்பையில் நடக்கும் இந்திய கடல்சார் வார விழாவில் தமிழ்நாடு அரசும் பங்கேற்றுள்ளது.

கடல்சார் வாரியம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் குழுவாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகம், தொழில், நீலப்பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சியை முன்னெடுத்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் வணிக அமர்வுகளை நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டின் கடல்சார் திறன்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கடல்வழி மரபு அனைத்தும், ஒருங்கிணைந்து இவ்விழாவில் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தமிழகத்தின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரும் மும்பை மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், உலகளாவிய கடல்சார் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடனான புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் நவீன கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *