சென்னை:
வடகிழக்குப் பருவழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைக்குமாறு அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் பரவலாகப் பெய்துவரும் மழையால், தெருக்கள், சாலைகளில் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் – ஏஜிப்டி’ வகை கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றன. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை டெங்குவால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் இறந்துள்ளனர்.
இத்தகைய சூழலில், டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்குவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
அதனால், அரசு மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொதுவாக பருவகால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருட்களும் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே டெங்கு, வயிற்றுப்போக்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், மழைக்கால காய்ச்சல்களுக்கும் சிகிச்சை அளிக்க மாத்திரைகள் வாங்கப்பட்டன. டெங்கு, இன்ப்ளூயன்சாவுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போதிய எண்ணிக்கையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இவைதவிர தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆர்எஸ் (உப்பு – சர்க்கரை) கரைசல், கிருமி தொற்றுக்கான மாத்திரைகள் ஆகியவை அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அளவு இருக்கின்றன.
நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது கூடுதல் எண்ணிக்கையிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன” என்றனர்.