சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கவின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த லிப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சமீபத்தில் வெளியான கிஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
கிஸ் படத்தை தொடர்ந்து, கவின் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கும் மாஸ்க் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு நடிகையான ருஹானி சர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களை தவிர, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மாஸ்க் திரைப்படம் வரும் நவம்பர் 21-ம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
டிரெய்லர் வெளியீட்டுக்கு பிறகு நடிகர் கவின் பேசியதாவது:-
எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணாவுக்கு நன்றி. அவரின் பீட்சா படத்தில் தான் நான் அறிமுகமானேன். நாம் விரும்புவதை விருப்பத்துடன் செய்தால் அது நடக்கும் என நிரூபித்தவர்.
வெற்றிமாறன் சார் அவரெல்லாம் கூப்பிடுவார் என நான் நினைத்ததில்லை. அவர் ஆபிஸில் இருந்து கால் வந்தது. அவரே தான் கதை சொன்னார், அவரே கதை சொல்கிறார் என்றால் அவர் கதை மேல் வைத்திருக்கும் நம்பிக்கை எனக்கு முக்கியமாகப் பட்டது.
அவர் சொக்கலிங்கம் சார் பற்றி மிகப்பெருமையாக சொன்னார். இந்தப்படம் ஜெயித்தே ஆக வேண்டும் என்றார், அது ஆடுகளம் இண்டர்வெல் மாதிரி இருந்தது. கண்டிப்பாகப் பந்தயம் அடித்துவிடுவோம் சார். ஆண்ட்ரியா மேடம் தான் முதலில் கதை கேட்டார். அவர் நடிப்பு மிகச்சிறப்பாகப் பேசப்படும்.
ஜீவி சார் இத்தனை வேலைகளை எப்படிச் செய்கிறார் என ஆச்சரியமாக இருக்கும். சார் உடலை பார்த்துக்கொள்ளுங்கள். பவன் சார், ரெடின் சார் நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி.
நவம்பர் 21 படம் திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.