சென்னை:
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையின் கீழே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்தத
நேருவின் படத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.எம்.அசன் மவுலானா, எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் (பொறுப்பு) வே.அமுதவல்லி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்தியநாதன், கூடுதல் இயக்குநர் (செய்திகள்), எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு மேலாண்மைக்குழு தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் நேருவின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் நேருவின் படத்துக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
ஓவியப் போட்டி: தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் ஜவஹர்பால் மஞ்ச் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு செல்வப்பெருந்தகை பரிசுகளை வழங்கினார். மேலும், வாக்கு திருட்டு தொடர்பாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகமது நவுசத் அலி தயாரித்துள்ள ‘ஹூ இஸ் ஷி’ என்ற குறுந்தகடையும், அவர் வெளியிட்டார். விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர் – வீராங்கனைகளும் கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரூபி மனோகரன், அசன் மவுலானா, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கீழானூர் ராஜேந்திரன், டாக்டர் விஜயன், அமைப்புச் செயலாளர் ராம்மோகன், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிந்துஜா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.