சென்னை,
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினியின் 173-வது படத்தை சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில் திடீரென இயக்குநர் சுந்தர் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்.
புதிய படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் எனது மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். ஆர்வத்துடன் காத்திருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியதில் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது தொடர்பாக பல்வேறு யூகங்கள் உலா வந்தன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் உங்கள் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்த படத்தில் இருந்து திடீரென அவர் விலகி உள்ளார். மீண்டும் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ‘அவரின் நிலைப்பாட்டை அவர் சொல்லி இருக்கிறார். அது பத்திரிகைகளில் பார்த்தோம். நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்தார் போல் கதை இருக்க வேண்டும். அவருக்கு கதை பிடிக்கும் வரை புதிய இயக்குனரை தேடிக் கொண்டு இருப்பேன்’ என்றார்.
மீண்டும் உங்களுடன் இணைவதற்கு முயற்சி எடுக்கப்படுமா? என்ற மற்றொரு கேள்விக்கு, பதில் அளித்த அவர், ‘ரஜினிகாந்த் அவர்களுக்கு ஏற்றார் போல், பிடித்தார் போல் கதை அமைய வேண்டும்’ என்று கூறினார்.
‘நீங்களும், ரஜினியும் இணையும் படம் எப்போது?’ என்று கேட்ட போது, ‘அது வேறொரு கதை. அந்த கதைக்கான விவாதம் போய் கொண்டு இருக்கிறது. அதற்கு முன்பாக எனது தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்திற்கான வேலைகள் முதலில் முடிக்கப்படும். அந்த கதை எப்படி இருக்கும்?’ என்ற கேள்விக்கு ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்றார்.