2025 கார்த்திகை மாத ராசிபலன்!!

தனுசு ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, அஷ்டமத்தில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறையும்.

வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். கொடுக்கல் – வாங்கல்களில் புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பயணங்களை திடீர், திடீரென மாற்றியமைப்பீர்கள். தொழிலில் குறுக்கீடுகளும், தொல்லைகளும் உண்டு. நினத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நீண்ட நாட்களாக கட்டுப்பட்டிருந்த நோய் மீண்டும் தலைதூக்கும்.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு நன்மை தரும் காலமாகவே அமையும். ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு.

கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது மிகுந்த நன்மையை உண்டாக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

விருச்சிக – சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 12-க்கு வருவது யோகம்தான்.

இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் உருவாகும். ‘சுக்ர மங்கள யோக’த்தால் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. ஊர் மாற்றங்கள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு – செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி, உங்கள் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான அவர், உங்கள் ராசிக்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

‘வீடு கட்டலாமா? அல்லது கட்டிய வீடாக விலைக்கு வாங்கலாமா?’ என்று சிந்திப்பீர்கள். தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். மன நிம்மதிக்காக ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விருச்சிக – புதன்

கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 12-ல் வரும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பரபரப்பாகக் காணப்படுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.

உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு உள்நாட்டில் இருந்தும் அழைப்பு வரலாம். வெளிமாநிலங்களில் இருந்தும் அழைப்புகள் வரலாம். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சேமிப்பு கரைந்தாலும், பொருளாதாரத்தை ஈடுகட்டுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் தடை ஏற்படும்.

வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு வந்து கொண்டேயிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு வரவும், செலவும் சமமாகும். மாணவ – மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் – வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 18, 26, 27, 30, டிசம்பர்: 1, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

மகர ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, குடும்ப ஸ்தானத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார்.

குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. உச்சம் பெற்ற குருவின் பார்வை பதிவதால் மிச்சம் வைக்கும் விதத்தில் பொருளாதார நிலை உயரும். வாக்கிய கணித ரீதியாக இன்னும் சில மாதங்களுக்கு ஏழரைச்சனி இருக்கிறது.

அதுவரை நன்மையும், தீமையும் கலந்து நடைபெற்றாலும், குரு பார்வை இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து திருப்திப்படுத்தும். புதிய ஒப்பந்தங்கள் மகிழ்ச்சி தரும் விதம் அமையும்.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்பது ஜோதிட விதி. அந்த அடிப்படையில் பார்வை பலன் நன்மை செய்தாலும் கார்த்திகை 2-ந் தேதி முதல் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். எனவே கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம். இருப்பினும் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

விருச்சிக – சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது தொழில் போட்டி அகலும். எதிரிகள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். கிளைத் தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பூமி விற்பனையாலும் லாபம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும் நேரம் இது.

தனுசு – செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சொத்து விற்பனையால் லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவோடு சில நலன்களைப் பெறுவீர்கள்.

‘பழைய வாகனங்கள் பழுதாகி செலவு வைக்கின்றதே’ என்று கவலைப்பட்டவர்கள், புதிய வாகனங்கள் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிக – புதன்

கார்த்திகை 20-ந் தேதி, விருச்சி ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஊதிய உயர்வு இப்பொழுது கிடைக்கும்.

வெளிநாட்டில் நல்ல நிறுவனங்களில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். பிள்ளைகளின் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக் கடை வைத்தோர் விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பர்.

கலைஞர்களுக்கு முயற்சி களில் வெற்றி உண்டு. மாணவ – மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும். பெண்களுக்கு சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 20, 21, 27, 28, டிசம்பர்: 2, 3, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

கும்ப ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள்.

மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார்.

இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.

விருச்சிக – சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே ‘சுக்ர மங்கள யோகம்’ உருவாகிறது.

பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு – செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும்.

புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

விருச்சிக – புதன்

கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் ‘புத ஆதித்ய யோகம்’ ஏற்படுகிறது.

எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு.

கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ – மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

மீன ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலேயே பதிகிறது.

ராசிநாதன் ராசியைப் பார்க்கும் இந்த நேரம் நீங்கள் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுவதால் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள்.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கார்த்திகை 2-ந் தேதி முதல் அவர் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மனக்கவலை அதிகரிக்கும்.

குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் – வாங்கல்களில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் பணியாளர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

இக்காலத்தில் வியாழக் கிழமைதோறும் விரதம் இருந்து குருவை வழிபடுவது நல்லது. குறிப்பாக யாரையும் நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

விருச்சிக – சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 9-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் உன்னதமான நேரமாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.

அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பல நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவும் கைகொடுக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

தனுசு – செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

தொடர்ந்து சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரைகுறையாக நின்ற பணியைத் தொடருவீர்கள். புதிய தொழிலால் பொருளாதார நிலை உயரும்.

விருச்சிக – புதன்

கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன்.

அவர் 9-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் பொருளாதார நிலையில் திருப்தி ஏற்படும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும்.

அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு அதிகார அந்தஸ்து பெறும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ- மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவோடு படிப்பில் முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 20, 21, 26, 27, டிசம்பர்: 2, 3, 6, 7.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *