கொல்கத்தா:
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சளாரான காகிசோ ரபாடா விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக கார்பின் போஷ் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் கலவையுடன் களமிறங்கியது. சுழலில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ராவுடன் முகமது சிராஜ் களமிறங்கினார்.
அதிர்ச்சி அளிக்கும் விதமாக சாய் சுதர்சன் நீக்கப்பட்டு இருந்தார். 3-வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று நிதிஷ் குமார் ரெட்டி இடத்தில் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரெல் சேர்க்கப்பட்டிருந்தார்.
பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன், எய்டன் மார்க்ரம் ஜோடி அற்புதமான தொடக்கம் கொடுத்தது. இந்த ஜோடி 10 ஓவர்களில் 57 ரன்களை விளாசியது. அக்சர் படேல் பந்தில் மார்க்ரம், லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி அசத்தினார்.
சிறப்பாக விளையாடி வந்த இந்த ஜோடியை 11-வது ஓவரில் ஜஸ்பிரீத் பும்ரா பிரித்தார். ரியான் ரிக்கெல்டன் 22 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் போல்டானார். தனது அடுத்த ஓவரில் எய்டன் மார்க்ரம்மையும் வெளியேற்றினார் பும்ரா.
பேக் ஆஃப் தி லென்தில் பும்ரா வீசிய பவுன்ஸர் பந்தை எய்டன் மார்க்ரம் தடுமாறியபடி எதிர்கொண்ட போது கையுறையில் பந்து பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்திடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் தெம்பா பவுமா 11 பந்துகளில், 3 ரன்கள் சேர்த்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் பேக்வர்டு ஷார்ட் லெக் திசையில் நின்ற துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார். இதன் பின்னர் களமிறங்கிய டோனி டி ஸோர்ஸி, வியான் முல்டருடன் இணைந்து நிதானமாக விளையாடினார்.
மதிய உணவு இடைவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 27 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. வியான் முல்டர் 22, டோனி டி ஸோர்ஸி 15 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பின்னர் இந்த ஜோடி தொடர்ந்து விளையாடியது. வியான் முல்டர் 51 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்றபோது எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி சரிவை நோக்கி பயணித்தது. டோனி டி ஸோர்ஸி 55 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
கைல் வெர்ரெய்ன் 36 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் வீசிய 45-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இதே ஓவரில் மார்கோ யான்சன் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்.
ஆல்ரவுண்டரான கார்பின் போஷ் 23 பந்துகளில், 3 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் படேல் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதைத் தொடர்ந்து சைமன் ஹார்மர் 5 ரன்களில் பும்ரா பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
கடைசி வீரராக கேசவ் மஹாராஜ் ரன் எதும் எடுக்காத நிலையில் பும்ராவின் யார்க்கரை தடுத்து விளையாட முயன்ற போது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.
முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 55 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 74 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 14 ஓவர்களை வீசி 5 மெய்டன்களுடன், 27 ரன்களை வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார். குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் மார்கோ யான்சன் வீசிய பந்தை கட் ஷாட் விளையாட முயன்று போல்டானார்.
கே.எல்.ராகுல் 59 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 38 பந்துகளில், 6 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க 122 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
13 வருடத்துக்கு பிறகு.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
கடைசியாக இந்திய அணி கடந்த 2012-ம் ஆண்டு 4 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி இருந்தது. இதன் பின்னர் 13 வருடங்களுக்கு பிறகு தற்போது விளையாடி வருகிறது.
102 ரன்களுக்கு 10 விக்கெட்: முதல் 10 ஓவர்களில் 57 ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 45 ஓவர்களில் மேற்கொண்டு 102 ரன்களை சேர்ப்பதற்குள் 10 விக்கெட்களையும் கொத்தாக தாரை வார்த்தது. அந்த அணியின் பேட்டிங் 4 மணி நேரம் 13 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
2-வது குறைந்த பட்சம்: தென் ஆப்பிரிக்க அணி முதல் விக்கெட்டுக்கு 50+ ரன்களை சேர்த்து குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழப்பது இது 2-வது முறையாகும்.
இதற்கு முன்னர் இந்திய அணிக்கு எதிராக 2018-ம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் முதல் விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்க அணி 52 ரன்கள் சேர்த்திருந்த போதிலும் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்து இருந்தது.
23 டாட் பால்கள்: தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் முதலில் எதிர்கொண்ட 23 பந்துகளில் ரன்கள் சேர்க்கவில்லை. 24-வது பந்தில்தான் அவர், ரன் கணக்கை தொடங்கினார்.
36 ஆயிரம் ரசிகர்கள்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை காண மைதானத்துக்கு 36 ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர்.
பவுன்ஸ் மாறுபாடு: ஈடன் கார்டன் மைதான ஆடுகளத்தில் பந்துகள் பவுன்ஸ் ஆவதில் மாறுபாடுகள் இருந்தன.
இதனால் பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க சிரமப்பட்டனர். ஆனால் 159 ரன்களுக்கு ஆட்டமிழக்கக்கூடிய அளவிலான ஆடுகளம் இல்லை என கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
6 வருடத்துக்கு பிறகு 5 விக்கெட்: இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 5 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.
அதன் பின்னர் தொடக்க நாளில் தற்போது ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார்.
93 வருடத்தில் முதன் முறை: கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 6 இடதுகை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கியது.
இந்தியகிரிக்கெட்டின் 93 வருட வரலாற்றில் ஓர் டெஸ்ட் போட்டியில் 6 இடது கை பேட்ஸ்மேன்கள் விளையாடுவது இதுவே முதன்முறை. இந்திய அணியின் லெவனில் இடது கை பேட்ஸ்மேன்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 596 போட்டிகளுக்கு பிறகு இதை இந்திய அணி செய்துள்ளது.
16-வது முறையாக ‘5’: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 16-வது முறையாகும்.