புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை அணிவது வழக்கம். 41 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் இன்று பிறந்ததையொட்டி சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இதற்காக, பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டார்கள்.
இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் நடை திறக்கப்பட்டு, மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பெரிய நடை பந்தல், சிறிய நடை பந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.