அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது. வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்த் ரவி, இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது.
இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.