பிஹார் ;
பிஹாரில் பாஜக கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர் தான் என அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பிஹாரில் பாஜக கூட்டணியின் வெற்றிக்குக் காரணம் எஸ்ஐஆர் தான்.
அது அப்படியே தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். நிதிஷ் குமாரைப் போலவே தமிழகத்திலும் அதிமுக 220 இடங்களுக்கு மேல் வேற்றிபெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார்.
எஸ்ஐஆரை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அது 5, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடப்பது தான்.
காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்திருக்கிறது. இப்போது எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் இடங்களில் திமுக-வினர் தான் இருக்கிறார்கள்.
அப்படி இருந்தும் ஏன் நடுங்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், மக்களுக்கு உண்மை என்னவென்று தெரியும்.
எஸ்ஐஆரால் தமிழகத்தில் ஒரு கோடி வாக்குகள் நீக்கப்படும் என சீமான் சொல்கிறார். ஆனால், அதைவிட அதிகமான வாக்குகள் குறையும்.
திண்டுக்கல் தொகுதியிலேயே 40 முதல் 50 ஆயிரம் வாக்குகள் குறையும். அவையெல்லாம் போலி வாக்குகளாகத்தான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.