புதுடெல்லி:
ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) திட்டமிட்டுள்ளது. இதன்படி வருங்காலத்தில் ஆதார் அட்டையில் புகைப்படம், கியூஆர் கோடு மட்டுமே இடம்பெறும்.
இதுகுறித்து, யுஐடிஏஐ தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் அண்மையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற கருத்தரங்கில் கூறியதாவது: அரசு, தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்களிடம் ஆதார் அட்டை நகல்கள் கோரப்படுகிறது.
இதன்மூலம் தனிநபர், நிறுவனங்களுக்கு பொதுமக்களின் ஆதார் விவரங்கள் கிடைக்கின்றன.
குறிப்பாக ஓட்டல்கள், மொபைல் போன் சிம் விற்பனையாளர்கள், கருத்தரங்குகளை நடத்துவோருக்கு ஆதார் விவரங்கள் கிடைக்கின்றன. இதை சிலர் தவறாக பயன்படுத்தி ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வரும் டிசம்பரில் புதிய விதிகள், மாற்றங்களை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளோம். முதல்கட்டமாக ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள எம்ஆதாருக்கு பதிலாக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
இதன்மூலம் எந்தவொரு இடத்திலும் பொதுமக்கள் ஆதார் நகலை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆதார் செயலி வாயிலாக டிஜிட்டல் முறையில் தகவல்களை அளிக்க முடியும்.
அடுத்த கட்டமாக ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு மட்டுமே அச்சிட்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக 12 இலக்க எண் ஆதார் அட்டையில் அச்சிடப்படாது.
எனினும் அட்டைதாரரின் பெயர் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிச்சயமாக முகவரி இடம்பெறாது. பிரத்யேக செயலி அல்லது யுஐடிஏஐ நிறுவனத்தால் அங்கீகரிக் கப்பட்ட கருவியால் மட்டுமே கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்களை பெற முடியும். இதன்மூலம் மோசடிகள் முழுமையாக தடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.