மிர்பூர்:
2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 217 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றது.
வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதிய 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, மிர்பூரில் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 476 ரன்களும், அயர்லாந்து 265 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம் 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து 509 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை விளையாடியது. 4-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை அயர்லாந்து வீரர்கள் கர்ட்டிஸ் கேம்ப்பெர் 34 ரன்களுடனும், ஆன்டி மெக்பிரையன் 11 ரன்களுடனும் தொடங்கினர்.
ஆனால் வங்கதேச வீரர்களின் அபார பந்துவீச்சால் அயர்லாந்து அணி 56 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்ட்டிஸ் கேம்ப்பெர் 71, ஆன்டி மெக்பிரைன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து 217 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹீமும், தொடர் நாயகனாக தைஜுல் இஸ்லாமும் தேர்வு செய்யப்பட்டனர்.
டி20 தொடர்: இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சட்டோகிராமில் நடைபெறவுள்ளது.