சென்னை:
சமூக நலத்துறை சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்கள், அலகுகளை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குழந்தைகள் நலன் – சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான விருதுகள் – அரசு குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தஞ்சாவூர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் என்ற பிரிவில் தூத்துக்குடி புனித மரியன்னை கருணை இல்லம், சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என்ற பிரிவில் சென்னை அரசினர் கூர்நோக்கு இல்லம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு என்ற பிரிவில் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்.
பரிசுத் தொகையாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.
அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சமூக நலத் துறைச் செயலர் ஜெய ஸ்ரீமுரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.