கோவையில் நிருபர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்,கோவை தொகுதியில் ஏராளமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை, பெரும்பாலும் இன்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள்.
இந்நிறுவனத்தினர், பெரிய நிறுவனங்களிடமிருந்து ஜாப் ஆர்டர் பெற்று, சிறு சிறு உதிரிபாகங்கள் தயார்செய்து கொடுக்கின்றனர். இந்த தொழிலுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி என்பதே அதிகம். ஆனால், ஒன்றிய அரசு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது. இதனால், இத்தொழில்கள் பெரும்பாலும் முடங்கிப்போய் உள்ளன. கடந்த பத்து வருடமாக இந்த தொழில்துறையினர் கடுமையான அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இத்துறையினரை கண்டுகொள்ள யாரும் இல்லை. ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அங்குமிங்கும் திருக்குறள் பேசினால், தமிழர்கள் ஈர்ப்பு அடைந்து விடுவார்கள் என தப்பு கணக்கு போடுகிறார். அவர், இத்துறை மேம்பாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஏதாவது செய்தாரா?
கோவை தொகுதியில் எனக்கு எந்த சவாலும் இல்லை. சவால் முழுவதும் அண்ணா மலைக்குத்தான். என்னை பொறுத்தவரை, அண்ணாமலை, தேர்தல் களத்திலேயே இல்லை. அவரைப்பற்றி பேசி, எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மோட்டார், பம்பு, டெக்ஸ்டைல், விசைத்தறி, கைத்தறி என எல்லா துறையினருமே ஜி.எஸ்.டி வரி விதிப்பால் அவதியுறுகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் உள்ள தொழில்முனைவோர் பலமுறை அண்ணாமலையிடம் நேரில் சந்தித்து, இத்துறையில் உள்ள நெருக்கடிக்கு தீர்வு காணக்கோரி, ஒன்றிய அரசை வலியுறுத்தும்படி, மனு அளித்துள்ளனர். ஆனால், அண்ணாமலை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான், உள்ளூர் பையன், இந்த ஊர் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். அவர்களது முன்னேற்றத்துக்காக என்னால் முடிந்த பணிகளை செய்வேன். ஆனால், அண்ணாமலை வெளியூர்காரர். நான், அமைச்சராகி கோவை தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொண்டு வருவேன் என அண்ணாமலை கூறுகிறார். அவர், கண்டிப்பாக ஜெயிக்க மாட்டார். மந்திரியும் ஆக மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.