டெல்லி;
அமலாக்கத்துறையின் சம்மன்களை புறக்கணித்து விசாரணைக்கு ஆஜராகாமல் உள்ளார் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மீது தொடரப்பட்ட வழக்கில், டெல்லி நீதிமன்றம் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. இத்தகைய சூழலில் தற்போது அமலாக்கத்துறை அதிரடியாக 9 வது சம்மனையும் அவருக்கு அனுப்பி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கூறியுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக உள்ள அர்விந்த் கேஜ்ரிவால் அரசு கொண்டு வந்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை முறைகேடு பூதாகரமாகி உள்ளது.
இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் எம்.பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அர்விந்த் கேஜ்ரிவாலிடமும் இது தொடர்பாக சிபிஐ விசாரித்தது.
இதற்கிடையே தான் அமலாக்கத்துறை கேஜ்ரிவாலிடம் விசாரிக்க 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாவில்லை.

இதையடுத்து கேஜ்ரிவால் சம்மன்களை புறக்கணிப்பதாக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார்.
இந்நிலையில் தான் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இன்று மீண்டும் 9 வது முறையாக புதிய சம்மன் அனுப்பி உள்ளது. அதில் வரும் 21ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.