திருமலை:
திருப்பதி ஏழுமலையானை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை நேற்று அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் நேற்று மாலை ரஜினிகாந்த் தனது குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சென்றார். பின்னர் அவர் இரவு திருமலையில் தங்கினார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மருமகன்கள் பேரன்கள், உறவினர்கள் என அனைவரும் இணைந்து விஐபி பிரேக் மூலமாக சுவாமியை தரிசனம் செய்தார்.
அப்போது அவர் துலாபாரத்தில் தனது எடைக்கு இணையாக நாணயங்களை வழங்கினார். மேலும் அவரது மனைவி, மகள்கள், பேரன்மார்களும் தங்களது எடைக்கு எடையாக நாணயங்கள், வெல்லம், சர்க்கரை போன்றவற்றை வழங்கினர்.
அதன் பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து ரங்கநாயக மண்டபத்தில் ரஜினிகாந்த் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரஜினிகாந்த்தை பார்த்த ரசிகர்கள், ‘தலைவா… தலைவா’ என கோஷமிட்டனர். பின்னர் விடுதிக்கு சென்று சற்று நேரம் ஓய்வெடுத்த ரஜினிகாந்த் காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.