ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்கு டிச.16-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை:
புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் வகையில் கட்டும் தமிழ்நாடு ஹஜ் இல்லம் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் டிச.16-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் இதற்காக அடிக்கல் நாட்டுகிறார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திராவிட மாடல் ஆட்சியின் அடிப்படை நோக்கம் எல்லோருக்கும் எல்லாம் என்பதே ஆகும்.

அரசு நிறைவேற்றும் திட்டங்கள் அனைத்தும் சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் செயல்படுத்தி வருவது இந்த உண்மையைத் தெளிவுபடுத்தும்.

முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் வாழும் அனைவரையும் போல் சிறுபான்மையின மக்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறார். இஸ்லாமிய சமுதாய மக்கள் ஹஜ் பயணம் மேற்கொள்வதை அவர்களின் வாழ்நாள் கடமைகளில் முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் சென்னை வரும் இஸ்லாமியர்கள் பயணம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகச் சென்னை வந்து தங்கி சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கு வசதியாக விமான நிலையத்துக்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் நங்கநல்லூரில் ஒரு ஏக்கர் அரசு நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 400 ஹஜ் புனித பயணிகள் தங்குவதற்கு ஏற்ப தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் டிச.16-ம் தேதி காலை 10 மணி அளவில் அடிக்கல் நாட்டுகிறார்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *