சென்னை:
சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டம் சிவானந்தா சாலையில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்டோர் திமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக மனுவை அளித்துவிட்டு போராட்ட இடத்துக்கு வந்தனர்.
அப்போது பெ.சண்முகம் பேசியதாவது: தமிழகம் முழுவதும் ஆட்சே பணைக்குரிய புறம்போக்கு நிலங்கள் என்று அரசால் வகைப்படுத்தப்பட்டிருக்கும் நீர்நிலை புறம்போக்கு, அனாதீனம் புறம்போக்கு, வாய்க்கால் புறம்போக்கு, பாதுகாப்பு துறை, ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்கள், கோயில் இடங்கள் போன்றவற்றில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் அவ்வப்போது நீதிமன்ற உத்தரவு, அதிகாரிகளுடைய ஆணை என்ற பெயரில் அவர்களை அவர்களின் குடியிருப்புகளில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த போராட்டத்தை நடத்தினோம்.
இதன் விளைவாக தமிழகம் முழுவதும் உள்ள ஆட்சேபணைக்குரிய புறம்போக்குகளை எல்லாம் வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதற்கு ஆலோசனை வழங்க உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்கும் என்றும், பட்டா பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவோம் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார் என்று அவர் கூறினார்.