சென்னை:
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் திரையரங்குகளில் கிடைப்பதில் சிரமம் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்கள் வெளியீடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படத்தை வெளியிட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ வெளியானால் திரையரங்குகள் பிடிப்பதில் கடும் போட்டி இருக்கும். ஏனென்றால் ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ வெளியாகவுள்ளது.
இந்த குழப்பங்கள் இருப்பதால் ‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டு தேதி என்ன என்பது விரைவில் தெரியவரும். இப்போது வரை ஜனவரி 14-ம் தேதி வெளியீடு என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அதில் மாற்றங்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.