2026 சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுகவுடன் கூட்டணித் தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக, தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையழுத்தானது. அதிமுக கூட்டணியல் திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.
இந்நிலையில் சென்னையில் அதிமுக உடனான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , “மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்து புரட்சி செய்த அதிமுக அலுவலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி.
2011-ல் அதிமுக, தேமுதிக இடையே உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகி உள்ளது; அதிமுக கூட்டணி என்பது தேமுதிகவுக்கு ஒரு நல்ல ராசியான கூட்டணி. வரும் மக்களவைத் தேர்தலிலும், 2026-ம் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி நிச்சியம் வெற்றி பெறும்;அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள், சவால்களை கடந்து வெற்றி பெறும் . 2 தெய்வங்களின் ஆசியோடு எங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்றார்.