பிடிஆரை எதிர்த்து நிற்க பிரியப்படும் பாஜக! !

மதுரை மத்திய தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அமைச்சரானவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். கட்சித் தலைமையுடன் மிக நெருக்கமாக இருந்ததால் திமுக ஆட்சி அமைந்ததும், இவருக்கு நிதியமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

மதுரை மேயர் தேர்தலிலும் இவர் சொன்னவருக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. இதனால் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜன், ஆடியோ விவகார சர்ச்சையில் சிக்கியதால் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, உள்ளூர் அரசியலில் தியாகராஜனின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. இதனால், அவரது விசுவாசிகள் பலரும் அவரது அரசியல் எதிரியான மாவட்டச் செயலாளர் தளபதியின் பக்கம் சாய்ந்தனர்.

இப்படியான சறுக்கல்கள் இருந்தாலும் மூன்றாவது முறையாக மதுரை மத்தியிலேயே களமிறங்க தயாராகி வருகிறார் பழனிவேல் தியாகராஜன். இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தங்களுக்காக மதுரை மத்தி, வடக்கு, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளை கேட்கிறது பாஜக.

இதில், வடக்கு தொகுதியை பாஜக-வில் இருந்து அதிமுக-வுக்கு வந்த டாக்டர் சரவணன் கேட்கிறார். திருப்பரங்குன்றம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் சிட்டிங் தொகுதி என்பதால் அதை விட்டுத்தராது அதிமுக.

இதையெல்லாம் கணக்கிட்டு மத்திய தொகுதிக்கு பாஜக தரப்பில் கூடுதல் அழுத்தம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மதுரை அதிமுக நிர்வாகிகள், ‘‘அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதியில் வேலைவாய்ப்பு, பெரிய வளர்ச்சித் திட்டங்கள் எதற்கும் வழிசெய்யவில்லை. தொகுதி மக்களுடனும் பெரிதாக தொடர்பில் இல்லை.

சொந்தக் கட்சிக்குள்ளும் அவருக்கு பிடிமானம் இல்லை. மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் பிடிஆரின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதைத் தடுத்து நிறுத்த அவர் எதுவும் செய்யவில்லை என்பதால் அவரது விசுவாசிகளே அவருக்கு எதிராக நிற்கிறார்கள். இந்த நிலையில், பாஜக அரசுக்கு எதிராக பிடிஆர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

அதனால், அவரோடு நாமே மோதிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறது பாஜக” என்றனர்.

“உட்கட்சி பூசல், அதிமுக வாக்கு வங்கி, வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி உள்ளிட்ட காரணிகளை வைத்து பிடிஆரை எளிதில் வீழ்த்தி விடலாம் என நினைக்கிறது பாஜக. ஆனால், இந்தத் தொகுதியில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கணிசமாக இருப்பது பிடிஆருக்கு இம்முறையும் கைகொடுக்கும்” என்றும் சிலர் சொல்கிறார்கள்.

பிடிஆரின் ஆதரவாளர்களோ, “இரண்டு முறையுமே ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தான் வெற்றிபெற்றார் பிடிஆர். இம்முறையும் அப்படித்தான் மக்களைச் சந்திப்பார். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கென தனிப்பட்ட செல்வாக்கு தொகுதி மக்களிடம் உள்ளது.

தொகுதிக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும். தலைமையும் அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளது. அதனால், தன்னை எதிர்க்க எந்தக் கட்சி வந்தாலும் மூன்றாவது முறையாகவும் அவர் முடிசூடுவார்” என்கிறார்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *