கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய்…அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் அதிகாரிகள்!!

சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்.

அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சென்னை பழைய விமான நிலையத்தில் 6-ம் எண் நுழைவு வாயிலில் வந்து இறங்கிய விஜய்யை மத்திய விமான பாதுகாப்பு படையினர் விமானம் நிறுத்தப்பட்டு இருந்த இடம் வரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அவர் விமான நிறுவனத்தின் காரில் ஏறி தனி விமானம் நிற்கும் பகுதிக்கு சென்றார்.

விஜய்க்கு ஏற்கனவே ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு இருக்கும் நிலையில் விமான நிலையத்திலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பின்னர் தனி விமானம் மூலம் விஜய் காலை 7.40 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

அவருடன் தனி விமானத்தில் த.வெ.க. தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், இணை பொருளாளர் ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் சி.ராஜேந்திரன், விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோரும் உடன் சென்றனர்.

விஜய் தங்குவதற்காக டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து சி.பி.ஐ. அலுவலகம் செல்லும் வழியில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜர் ஆவதற்கு வசதியாக இந்த ஓட்டலில் அறை முன்பதிவு செய்யப்பட்டது.

டெல்லிக்கு தனி விமானத்தில் சென்ற விஜய், பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார்.

அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார்.

அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளனர். இதற்காக 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்து வைத்துள்ளனர்.

விஜய்யிடம் 2 நாட்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது. இன்றைய விசாரணை முடிந்ததும் விஜய் தான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு தங்கும் அவர் நாளையும் விசாரணைக்கு ஆஜராகலாம் என்றும் கூறப்படுகிறது.

விஜய் இன்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானதையொட்டி டெல்லியிலும் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

டெல்லி விமான நிலையத்தில் அவர் வந்து இறங்கிய போது அவருக்கு விமான பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு அளித்தனர்.

மேலும் அவர் தங்கி இருந்த ஓட்டலிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் விஜய் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் வழியிலும், ஓட்டலில் இருந்து விசாரணைக்கு ஆஜராக செல்லும் வழியிலும் டெல்லி போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *