கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள சூடோபெட்ரைன் போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். சூடோபெட்ரைன் கடத்தல் தொடர்பாக 3 பேர் கைதான நிலையில் அவர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு சென்னையைச் சேர்ந்த தி.மு.க.வின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவான ஜாபர் சாதிக்கை தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரைப்பட இயக்குநர் அமீர் இயக்கத்தில் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தை ஜாபர் சாதிக் தயாரித்து வந்ததால் அவருக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் நேரில் ஆஜராகியுள்ளார்.
தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் உடனான தொடர்பு குறித்து அமீரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்