ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 25-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்வாரா?

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில் நம்பர் ஒன் வீரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்)-4ம் நிலை வீரரான ஜோகோவிச் ( செர்பியா ) மோதுகிறார்கள்.

6 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற அல்காரஸ் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான அவர் தற்போது தான் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.

கடந்த ஆண்டு அல்காரஸ் பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். அவர் 8-வது தடவையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார்.


38 வயதான ஜோகோவிச் 25-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் உள்ளார்.

24 கிராண்ட் சிலாம் பட்டம் வென்று முதல் இடத்தில் இருக்கும் சாதனையாளரான அவர், கடைசியாக 2023-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற பிறகு எந்த கிராண்ட்சிலாமும் பெறவில்லை.


5 கிராண்ட் சிலாம் போட்டிக்கு பிறகு ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அவர் 38-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இருவரும் மோதிய போட்டியில் அல்காரஸ் 4-ல், ஜோ கோவிச் 5-ல் வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று பிற்பகல் நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 2 தடவை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரும், நம்பர் ஒன் வீராங்கனையுமான சபலென்கா ( பெலாரஸ்)-ஐந்தாவது வரிசையில் உள்ள எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதுகிறார்கள்.


சபலென்கா 5-வது கிராண்ட் சிலாம் பட்டத்தை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறார். ரைபகினா முதல் கிராண்ட் சிலாம் பட்டத்துக்கு காத்திருக்கிறார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *