கோவை,

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 35-வது விளையாட்டு விழா, கோவையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில், கோவை மாவட்ட காவல் துறை துணை ஆணையர் எம்.பி. திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரி முதல்வர் சத்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், விளையாட்டு விழாவின் அடையாளமாகிய ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி அணிவகுத்து வந்தனர்.
சிறப்பு விருந்தினர் எம்.பி. திவ்யா உரையாற்றுகையில், “பெண்கள் உடல் நலமும் மனநலமும் உடையவர்களாக இருந்தால்தான் எதிர்காலத்தை துணிவுடனும் தெளிவுடனும் எதிர்கொள்ள முடியும். எனவே, கல்லூரி மாணவிகள் கல்வியுடன் உடல் நலத்தையும் பாதுகாப்பதில் சம அளவு கவனம் செலுத்த வேண்டும். குறிக்கோள் நிர்ணயம், திட்டமிடல், மன ஒருமைப்பாட்டுடன் தொடர்ச்சியான முயற்சி, நேர்மையான வாழ்க்கை போன்ற வாழ்வியல் திறமைகளை விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ளலாம்,” என்றார்.
தொடர்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்கள் தற்காப்புக் கலைகளிலும், மனவளத்தை பேணுவதிலும் திறன் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் கராத்தே, சிலம்பம், ஏரோபிக்ஸ் மற்றும் யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளையாட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, கல்லூரியின் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கணினி அறிவியல் துறை கைப்பற்றியது.