உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது” என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி மீது காலணி வீச முயன்றது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், “செப்டம்பர் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி அந்த வழக்கை கேலி செய்தார். நமது சனாதன தர்மம் தொடர்பான ஒரு வழக்கு வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் அவரையும் கேலி செய்யாதீர்கள்.
இதனால் நான் காயப்பட்டேன்… நான் குடிபோதையில் இதை செய்யவில்லை. அவரது செயலுக்கு நான் எதிர்வினை ஆற்றினேன். இதற்காக நான் பயப்படவில்லை. நடந்ததற்கு வருத்தப்படவும் இல்லை.
இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் தான் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் விரும்பினால் நான் சிறைக்குச் செல்ல தயார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றாலும் அது கடவுளின் விருப்பம் தான்” என்று தெரிவித்தார்.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.
அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது.
கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார்.