கொல்கத்தா:
மேற்குவங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நேற்று பதவியேற்றுக் கொண்டார். பிஹார் தலைநகர் பாட்னாவை சேர்ந்த ரவி, ஆரம்ப காலத்தில் செய்தியாளராகப் பணியாற்றினார். கடந்த 1976-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியானார்.
கடந்த 2014-ம் ஆண்டில் மத்திய அரசின் கூட்டு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018-ம் ஆண்டில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றார்.
அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி கடந்த 2019-ம் ஆண்டில் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அப்போது மேகாலயா ஆளுநர் பணியையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றார்.
இந்த சூழலில் கடந்த 5-ம் தேதி மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அன்றைய தினம் சில மாநிலங்களின் ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன்படி தமிழக ஆளுநராக பணியாற்றிய ஆர்.என். ரவி, மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 7-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கினார். சென்னையில் நேற்று முன்தினம் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று நடந்த விழாவில் அந்த மாநில ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றுக் கொண்டார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஜோய் பால், அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வர் மம்தா, தலைமைச் செயலாளர் நந்தினி சக்கரவர்த்தி, சபாநாயகர் பிமன் பானர்ஜி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிமன் பாசு உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்புக்கு பிறகு முதல்வர் மம்தா மற்றும் விருந்தினர்களுடன் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.