தேனி நாடாளுமன்ற தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். டிடிவி தினகரனுக்காக அவரது மனைவி அனுராதா தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் மதுரை மாவட்ட உசிலம்பட்டி பகுதியில் வாக்கு கேட்டு தினகரனின் மனைவி அனுராதா பேசும் போது , “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். சின்னத்தில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
ஏனென்றால் இதற்கு முன்பு போட்டியிட்டபோது வேறு சின்னத்தில் நின்றதால் இதை சொல்கிறேன். அவரது அரசியல் பாதை தொடங்கியது தேனி தொகுதியில் தான். இந்த தொகுதிக்காக நீங்கள் எதையும் கேட்க வேண்டிய அவசியமில்லை.
14 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி செய்தாரோ அதேபோல இப்போதும் செய்வார். அவர் என்னோடு மகளோடும் இருந்ததை விட உங்களோடு தான் அதிகமாக இருந்துள்ளார். ஆர்கே நகரில் கிடைத்தது இந்த குக்கர் சின்னம். ஆர்.கே நகரில் பட்டன் தேயும் அளவிற்கு வாக்களித்தார்கள். அதேபோல இந்தத் தேனி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற வேண்டும்.
குக்கர் சின்னம் நீங்கள் வீட்டில் பார்க்கும் குக்கர் போன்றது. தினசரி பால், சாப்பாடு வைப்போம். அந்த குக்கர் மாதிரி தானே அவர் முகமும் குண்டா இருக்கு. அவரை பார்க்கும்போது குக்கர் சின்னம் ஞாபகத்திற்கு வரவேண்டும். குக்கருக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் உங்கள் வளர்ச்சிக்கான ஓட்டு” என்று வாக்கு சேகரித்தார்.
