மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இன்று ஓட்டப்படிரம் தொகுதிக்குட்பட்ட கோரம்பள்ளம் பகுதியில் தனக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். பரப்புரையின் போது கனிமொழி பேசியதாவது,
”தூத்துக்குடி என்பது எனக்கு இரண்டாவது தாய் வீடு, கொரோனா காலத்திலும் இங்கு வந்து பணியாற்றி உள்ளேன். மழை வெள்ள பாதிப்பு வந்த போதும் உங்களோடு நின்று உங்களோடு பணியாற்றியுள்ளேன் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாமிரபரணி ஆற்றின் வடிகால் பாசனம் கடைசி சேரும் குளம், கோரம்பள்ளம். அதை தூர் வருவதற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்து தூர்வாரப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற தொகுதி மேம்பட்டியிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வசதிக்காக கிணறு அமைத்து பைப்லைன் போடப்பட்டு, அந்தப் பணிகள் தேர்தல் முடிவுகள் முடிந்தவுடன் விரைவில் தொடங்கப்படும்.
இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பதநீர் கடையை வைத்து, விற்பனை செய்து அதில் வரக்கூடிய வருமானத்தை ஒரு பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது மிகப் பெருமையான ஒரு விஷயம். கல்விக்கு நீங்க தரக்கூடிய முக்கியத்துவத்தை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.
புதிய கல்வி கொள்கையை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு பொறுத்த வரைக்கும் சில கிராமங்களில், முக்கியமாக மலைக் கிராமத்தில் மாணவர்கள் பள்ளியில் அதிகமாக இருக்க மாட்டார்கள். ஒரு முறை ஒரே ஒரு மாணவன் தான் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான், அந்தப் பள்ளிக்கூடத்தை மூடலாம் என்று அதிகாரிகள் சொன்னபோது, அந்த ஒரு மாணவனுக்காக நாங்கள் பள்ளிக்கூடத்தை நடத்துவோம் என்று சொன்னது இந்த தமிழ்நாடு. ஒரே மாணவருக்காகப் பள்ளிக்கு நடத்தப்பட்டு, நடத்தியும் வருகிறது.

புதிய கல்வித் கொள்கையில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடிவிட்டு அவர்கள் அனைவரும் ஒரே இடத்திற்குக் கொண்டு வந்து பள்ளி நடத்துகிறோம் என்கின்றனர். ஆனால் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திராவிட இயக்கம் நமக்குக் கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளது. திராவிட இயக்கம் நமது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக இட இடஒதிக்கீடு சண்டை போட்டு நமக்கு வாங்கி கொடுத்துள்ளது. ஆனால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக கொஞ்சம் கொஞ்சமாக இதே உரிமைகளை நம்மிடம் இருந்து பறிக்க நினைக்கிறது.
நீட் தேர்வைக் கொண்டு வந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டிய மருத்துவக் கல்லூரியில் நமது பிள்ளைகளுக்கு இடமில்லை என்கின்றனர். மதக் கலவரத்தை உருவாக்கி அதில் ஓட்டு வாங்கி விடலாமா? என்று நினைக்கக்கூடிய ஆட்சி பாஜக ஆட்சி. பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் நிம்மதியாக மக்கள் வாழ முடியுமா? மணிப்பூரை மறக்க முடியுமா? பிரதமர் தேர்தலுக்காகத் தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறார்
ஒன்றிய அரசு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுக்கவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 20 நாள், 25 நாள் வேலை கிடைத்தாலே பெரிய விஷயம். அதற்கும் சம்பளம் வருவது கிடையாது. இது மக்களுக்கான திட்டம் என்பதை மறந்து காங்கிரஸ் திமுக ஆட்சியில் கொண்டு வந்தது என்று நிறுத்த நினைக்கின்றனர்”, இவ்வாறு கனிமொழி பேசினார்.