நாட்டுக்கே பெருமை சேர்க்கக்கூடியவர் சசி தரூர்!! நான் ஆதரிக்கிறேன் – பிரகாஷ் ராஜ்..!

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 534 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கேரளா முக்கிய மாநிலமாக பார்க்கப்படுகிறது. கேராளாவில் காங்கிரஸ் கூட்டணி(UDF) vs இடதுசாரிகள் கூட்டணி(LDF) vs பாஜக என மும்முனை போட்டி நிலவி வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 20 லோக்சபா தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. ஒரேயொரு தொகுதியில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த முறை அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற கம்யூனிஸ்ட் கட்சி முயன்று வருகிறது. எனவே தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். மைசூர் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில், “கடந்த 2021-22ம் ஆண்டு வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே வாங்கிக்கொண்டிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமல்லாது, கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார். ஆனால் அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பை மறுபரிசீலனை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “பாஜக பொய்யர்களின் கூட்டம். பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் என்னை விட ஏழையா? இது நகைச்சுவைக்குரியது.

அவர் எப்படி என்னை விட ஏழையாக இருக்க முடியும்? எனக்கு புரியவில்லை. 608 ரூபாய் மட்டுமே வருமானமாக வாங்கிக்கொண்டிருந்ததாக அவர் கணக்கு காட்டியிருக்கிறார்.

நான் இரண்டரை கோடியை வரியாக செலுத்தினேன். நான் வரி கட்டவில்லையென்றால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவேன். அதனால் நான் மட்டும் செல்வந்தனாக இருக்க வேண்டியதில்லை. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேரும்போது அதற்கான வரி மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், அவர் என்னை விட ஏழை என்று நீங்கள் நம்புகிறீர்களா? அவர்கள் (பாஜக) ஒரு பொய்யர் கூட்டம்.

ராஜீவ் சந்திரசேகர் மைசூரைச் சேர்ந்த ராஜா. இப்போது அவர் பாஜக வேட்பாளராக உள்ளார். அவர் மைசூர் அரசர், மைசூர் மன்னரின் மகன்.

ஆனால் அவருடைய பிரமாண பத்திரத்தில் தனக்கு ரூ.6-9 கோடிகள் சொத்து மட்டுமே இருப்பதாகவும், ரொக்கமாக தன் பெயரில் ரூ.1.65 லட்சமும், மனைவி பெயரில் ரூ.50 ஆயிரமும், அவரது மகனுக்கு 5,000 மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார். சொந்தமாக கார் இல்லை, வீடு இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் ஊடகத்திடம் தான் ஒரு ஏழை என்று கூறியுள்ளார். ஆனால் அவரிடம் வெளிநாட்டு கார்கள் இருக்கின்றன. ஊடக நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளன. வரி ஏய்ப்பு செய்யும் அளவுக்கு புத்திசாலி. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றன.

நீங்கள் ஏன் திருடனிடம் புகார் கொடுக்கிறீர்கள். இந்த புகாரிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது அவர்களுக்கு தெரியும்.

கர்நாடகாவிலிருந்து ஏறத்தாழ மூன்று முறை ராஜீவ் சந்திரசேகர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், கர்நாடகாவுக்கு என்று அவர் எதையும் செய்தது கிடையாது. மணிப்பூர் சம்பந்தமாகவோ, விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாகவோ ராஜீவ் சந்திரசேகர் இதுவரை எதையும் பேசியது கிடையாது. இந்த முறை அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது.

ஆனால் கர்நாடகாவில் சீட் கிடைக்காததால் தற்போது கேரளாவின் திருவனந் தபுரத்திலிருந்து போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவனந்தபுரத்தில் வேட்பாளரை நிறுத்தியிருக்கக்கூடாது. நாடாளுமன்றத்தில் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக சசி தரூர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இவர் நாட்டுக்கே பெருமை சேர்க்கக்கூடியவர். சசி தரூர் தேசத்தின் பெருமை. எனவே நான் தரூரை ஆதரிக்கிறேன். அப்படியெனில் நான் இடதுசாரிகளுக்கு எதிரானவர் என்று அர்த்தம் கிடையாது.

இடதுசாரிகள் சூழ்ச்சி வலையில் விழுந்துவிடக் கூடாது. திருவனந்தபுரத்தில் கட்சியை பார்த்து வாக்களிக்காமல், தனி நபருக்கு வாக்களிக்க வேண்டும். இது நாட்டின் முக்கியமான தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அமைப்புகளைப் பாதுகாக்க இது ஒரு வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *