கல்வி இன்று கோயிலாக இல்லை; கடையாக மாறிவிட்டது! மாணிக்கம் தாகூர்….

சென்னை:
கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளில் இருந்து விலகி, அனைவருக்கும் தரமான, சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது! நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டில் 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது.

ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்தது. இன்று அது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டது.

லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை; லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்கு பூட்டு. இதுதானா புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை?

ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழி நடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்காமல், சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது.

புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து பெரிய விளம்பரங்கள் செய்தாலும், அதன் மத்தியில் உயர்கல்வியின் அடிப்படை பிரச்சி னைகள், கல்விக் கட்டண உயர்வு, வேலை வாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீட்டின் குறைவு, கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல் தீர்க்கப்படவில்லை.

இதன் விளைவு என்ன ?: நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மாணவர்கள் படிப்பை விட கல்விக் கடனைப் பற்றி கவலைப் படுகிறார்கள். பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அலைகிறார்கள். கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை விட வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

கல்வியை சந்தையின் கைகளில் ஒப்படைத்தால், மாணவர்கள் வாடிக்கையாளர்களாகவும், கல்லூரிகள் கடைகளாகவும் மாறிவிடும். அப்போது லாபம் இல்லாத கடைகள் மூடப்படுவது போல, கல்லூரிகளும் மூடப்படும்.

கல்வி விற்கப்படும் பொருள் அல்ல. அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம்.

கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளில் இருந்து விலகி, அனைவருக்கும் தரமான, மலிவான, சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும்” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *