புதுச்சேரி:
“தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை.
ஆளுநரும், முதல்வரும் அற்புதமான புரிதலுடன் பணியாற்றுக் கின்றனர். விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்,” என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் தவெக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. காங்கிரஸை சேர்ந்த விஸ்வநாதன், ராஜேஷ்குமார் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
இவர்கள் இன்று புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்று கவுரவித்தனர். அதைத் தொடர்ந்து நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் விஸ்வநாதன், ”புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை மனுவை தமிழக அமைச்சர்களிடம் தந்துள்ளது.
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்புப் பணி தமிழகம், விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்துள்ளது. தமிழக அரசோடு பேசி நில எடுப்பு பிரச்சினையை சீர் செய்து பல்நோக்கு விமான நிலையமாக இயங்கக் கோரியுள்ளனர். தமிழக முதல்வர் விஜய்யுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.
வீடூரில் இருந்தும், சாத்தனூரில் இருந்தும் புதுச்சேரிக்கு நீர் வரத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
நீர்வளத் துறை அமைச்சரிடம் பேசி புதுச்சேரிக்கு தர வேண்டிய நீரை பெற்றுத் தர முயற்சி எடுப்போம். திருச்செந்தூரில் புதுச்சேரிக்காக விடுதி கட்டப்பட வேண்டும்.
தமிழக அரசு நிலம் தரக் கோரியுள்ளனர். இதில் உடனடி நடவடிக்கை சுற்றுலாத் துறை எடுப்பதாக தெரிவித்து முதல்வர் விஜய் உடன் கலந்து ஆலோசிப்பார். காவிரி கடைமடை நீர் காரைக்காலுக்கு 7 டிஎம்சி தர வேண்டியுள்ளது.
அதை வழங்குவதை சீர் செய்யக் கோரியுள்ளனர். அதைப் பேசுவோம். புதுச்சேரிக்கு மாநில பல்கலைக்கழகம் இல்லை. தமிழகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைய உள்ளது.
நாளந்தா போன்று உலக பல்கலைக்கழகம் போன்று அமைக்க முதல்வர் விஜய் திட்டமிட்டு வருகிறார். அதில் புதுவைக்கான மாணவர் சேர்க்கை இருக்கும். புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க முடிவு செய்வோம்.
புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் விஜய்யை நேசிக்கிறார்கள். நேசிப்பும், பாராட்டும் வெற்றி உறவுக்கு கைகொடுக்கும். மிகப்பெரிய சந்திப்புகள் நடக்கும்.
புதுச்சேரி காங்கிரஸாரை அழைத்துள்ளோம். முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேச இருக்கிறார்” என்றார்.
முதல்வர் ரங்கசாமி பாஜகவுடன் இணக்கான உறவு இல்லாத நிலையில் தவெகவுடன் நெருக்கமாக இருப்பதால் கூட்டணிக்கு அழைப்பீர்களா என்ற கேள்விக்கு, ”அத்தைக்கு எப்போது மீசை முளைக்குமோ அப்போது பார்ப்போம்” என்றார்.
ஆளுநர் தலையீடு தமிழகத்தில் உள்ளதே என்று கேட்டதற்கு, “கடந்த காலங்களில் ஆளுநர் உடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர். நாங்கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க விரும்பவில்லை. தமிழக மண், நலன், உரிமையை பாதுகாக்க எந்த முடிவும் முதல்வர் எடுப்பார்.
ஆளுநரும், முதல்வரும் அற்புதமான புரிதலுடன் பணியாற்றுக்கின்றனர்.
விரைவில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.” என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.