நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை!!

நெல்லையில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு எழுதியுள்ள கடிதத்தில் , திருநெல்வேலி மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது.

சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது.

இதனால், நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரினில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

பண்குடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அதேபோல், இராதாபுரம் தாலுகா, கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது.

ஆகவே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை ஆய்வு செய்து, இதனை பேரிடராக கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *