தங்கள் கட்சித் தலைவரை மகிழ்விப்பதற்காக முதல்வர் விஜய்யை வருங்கால பிரதமர் என அமைச்சர்கள் பேசுவது தேவையற்றது; காங். எம்.பி. கிறிஸ்டோபர் திலக்!!

திருச்சி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், எம்.பி.யுமான கிறிஸ்டோபர் திலக் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து உரிய விவாதம் நடைபெறவில்லை.

இதுகுறித்து பதிலளிக்க தைரியம் இல்லாததால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்த உண்மையான நிலவரத்தை எடுத்துரைக்கும் வகையிலேயே ராகுல் காந்தி மனுஸ்மிருதியை சுட்டிக்காட்டி பேசினார்.

அதை இந்து மதத்துக்கு எதிரான கருத்தாக பாஜக திரித்துள்ளது அரசியல் உள்நோக்கம் கொண்டது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் இடையே தரம் தாழ்ந்த விவாதங்கள் நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தனது நிலைப்பாடு குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை கூட்டணி கட்சிகள் முன்வைக்கும்போது, அவற்றை உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய விளக்கம் அளிப்பது அரசுக்கு நல்லது.

தங்கள் கட்சித் தலைவரை மகிழ்விப்பதற்காக முதல்வர் விஜய்யை வருங்கால பிரதமர் என அமைச்சர்கள் பேசுவது தேவையற்றது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை, போதைப் பொருள் புழக்கம், மின்சார தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சியிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *