தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – தினகரன் வலியுறுத்தல்!!

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினாலும், குறைந்துவரும் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டத்தினாலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை, கோவை, மதுரை, தேனி, திருப்பூர், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் முறையான குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டிக்கும் வகையில் காலிக்குடங்களுடன் வீதிக்கு வந்து போராடும் சூழலுக்கு பொதுமக்கள் அனைவரும் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளுடன் பெயரளவுக்கு ஆலோசனக் கூட்டங்கள் நடத்துவதுதோடும், நிதி ஒதுக்குவதோடும் மட்டுமே தன் கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நிதி ஒதுக்கப்பட்டதற்கான பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்யாமல் இருப்பதே, தற்போது மக்கள் பெருமளவு பாதிக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கும், குடிநீர் வாரியம் விநியோகிக்கும் நீரின் அளவுக்குமான பற்றாக்குறை அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.

பொதுக் குழாய்கள் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீரை குடம் ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக ஏழை, எளிய மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, மாறிவரும் மழைப்பொழிவுக்கு ஏற்ற வகையில் நவீன மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்திடவும், ஏரி, குளங்களை முறையாக தூர்வாரி, பராமரித்து எதிர்காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *