அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி !!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சித்திரை மாத அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக திரளான பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை மாத அமாவாசையான இன்று (7-ந்தேதி) அதிகாலை சென்னை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாகனங்கள் மூலம் மலையடி வாரமான தாணிப்பாறைக்கு வந்து காத்திருந்தனர்.

காலை 6 மணிக்கு மலைப்பாதை திறக்கப்பட்டது. முன்னதாக பக்தர்களின் உடமைகளை வனத்துறையினர் சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலைப்பாதை மற்றும் கோவில்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக மலைப் பாதைகளிலும் கோவில் பகுதியிலும் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகாலிங்கத்திற்கு இன்று காலை 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் செய்திருந்தனர்.

பலர் முடி காணிக்கை செலுத்தினர். காலை 11 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் 10 மணிக்கே சாமி சரிசனம் செய்து விட்டு மலையில் இருந்து இறங்கினர்.

மேலும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறையில் இருந்து மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய சதுரகிரிக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *