காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் போலீசார் தாக்கியதில் சவுக்கு சங்கரின் வலது கை முறிவு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேற்று நீதிமன்றம் சிகிச்சைக்காக உத்தரவை பிறப்பித்தது. இந்த சூழலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
வலது கையில் முறிவு ஏற்பட்டதா?? எந்த மாதிரி காயம் உள்ளது ?என முதலில் அவருக்கு ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு பரிசோதனை முடித்துவிட்டு போலீசார் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ஐந்து நாட்கள் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளதால் அந்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மற்றும் வீரலட்சுமி ஆகியோர் அளித்த புகாரில் ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் யூ டியூபர் சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று கைது செய்தனர். இரு வழக்கிலும் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவினை போலீசார் சவுக்கு சங்கரிடம் வழங்கினா்.
இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.