பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும் – அமித்ஷா..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பி.டி.ஐ, செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

மத ரீதியிலான பிரசாரத்தை பா.ஜ.க செய்வதில்லை. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும், ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை குறிப்பிட்டு ஓட்டு கேட்பதும், பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கூறுவதும், மத ரீதியிலான பிரசாரம் எனில் அதை தொடர்ந்து செய்வோம்.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், தேர்தலுக்கு பின் ஓட்டு சதவீதத்தை வெளியிடுவது உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சியினர் இப்போது பெரிய பிரச்னையாக்குகின்றனர்.

நடந்து முடிந்த தெலுங்கானா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தல்களிலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டன. அந்த தேர்தல்கள் அனைத்தும் நியாயமாக நடந்தன என்பதை எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்வதானால், இதுவும் நியாயமான தேர்தலே.

தோல்வி கண் முன்னே தெரிவதால், எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே அழத் தொடங்கிவிட்டன.ஜூன் 6ம் தேதி வெளிநாடு புறப்படுவதற்கான காரணத்தை இப்போதே தேடத் துவங்கிவிட்டனர்.

ராகுலின் தோல்வியை பூசி மெழுகவே, தேர்தல் நடைமுறையில் குற்றம் கண்டுபிடிக்கின்றனர். தேர்தலுக்கு முன் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்காதது ஏன்?

பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் நிச்சயம் வெற்றி பெறும். ஒடிசா, ஆந்திரா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைப்போம்.

பிரதமர் மோடியின் முகத்தை பா.ஜ.க நம்பி இருப்பது, கட்சிக்கு எதிர்மறையானது அல்ல. அது நேர்மறையான ஓட்டு களையே எங்களுக்கு பெற்றுத் தருகிறது.

நாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் இம்முறை மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவோம். மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகளால் அது சாத்தியமாகப் போகிறது.

பெரிய வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது காங்கிரஸ் வழக்கம். அந்த வரிசையில், பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கப் போவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

ஹிமாச்சல் தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்தது. முதலில் அதையாவது நிறைவேற்றுங்கள்.

மேற்கு வங்கத்தில், 24 – 30 லோக்சபா தொகுதிகளையும், ஒடிசாவில் 16 – 17 தொகுதிகளையும், ஆந்திராவில் எங்கள் கூட்டணி 17 இடங்களையும் நிச்சயம் கைப்பற்றும். ஒடிசா சட்டசபையில் 75 இடங்களை பெறுவோம்.

தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க வின் ஓட்டு விகிதம் இம்முறை நிச்சயம் அதிகரிக்கும். தமிழகத்தில் பலமான போட்டி உள்ளது. புதிய அணியை களத்தில் இறக்கியுள்ளோம். எத்தனை இடங்களை பிடிப்போம் என்ற எண்ணிக்கையை கூற இயலாது.

ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக இடங்களை கைப்பற்றுவோம். தமிழகத்தில் மிக வலுவான அடித்தளத்தை உருவாக்குவோம் என்பது மட்டும் உறுதி.

ஜம்மு – காஷ்மீரில் வரும் செப்டம்பர் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படும். அதற்கு பின், ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் நடைமுறை தொடரும்.

பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்ததும், அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *