ஏழைகளின் நலன் காப்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம் – மோடி பேச்சு!!

புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;

“புதிதாக தேர்வாகியுள்ள எம்.பி.க்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. வெயில், இரவு, பகல் பாராது பாஜகவின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

2019-ல் எனக்கு கிடைத்த நம்பிக்கை மீண்டும் கிடைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 22 மாநிலங்களில் அதிக வெற்றி பெற்றுள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு இவ்வளவு பெரிய வெற்றி இதுவரை கிடைத்ததில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி எல்லாவற்றையும் விட வலிமையானது. இ.வி.எம். இயந்திரம், ஆணையம்குறித்து கேள்வி எழுப்பியவர்கள் தேர்த முடிவுக்கு பிறகு அமைதியாகிவிட்டார்கள்.

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணி சரியான பாதையில் செல்வதற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வாக்கு விழுக்காடு ஒரு உதாரணம். வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது தெரிகிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் அனைத்து மதமும் சமமானவை என்பதில் பாஜக கூட்டணி உறுதி கொண்டுள்ளது. ஏழைகளின் நலன் காப்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். ஆட்சியை நடத்த கருத்து ஒற்றுமையே அவசியம். பெரும்பான்மை அல்ல.

நாங்கள் தோற்றுவிட்டதாக எதிர்க்கட்சிகள் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றன.

நாங்கள் தோற்கவில்லை, தோற்கவும் மாட்டோம். நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்போம். எங்கள் கூட்டணிக்கு கிடைத்தது சாதாரண வெற்றி அல்ல, இமாலய வெற்றி.

10 ஆண்டுகளாகியும் காங்கிரசால் 100 இடங்களை கூட ஜெயிக்க முடியவில்லை. இந்த தேர்தலில் வென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.”

இவ்வாறு மோடி பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *