பாஜக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி!!

சென்னை;
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு பெருகி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, பாஜக சார்பில் திருச்சியில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழகம் முழுவதும் 8 பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஏழைகளின் முன்னேற்றம் கல்வியை சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய விஷயம். ஆனால், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை திமுகவினர் சொல்ல மாட்டார்கள்.

வரைவு அறிக்கையில் 3-ம் மொழியாக கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை மாற்றி, ஏதாவது ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாகப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாற்றினார்.

மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது அரசியல் புரட்சி. மே இறுதிக்குள் ஒரு கோடியை எட்ட வேண்டும் என்பதே இலக்கு.

தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், இதை மறைத்து திமுகவினர் அரசியல் செய்கின்றனர்.

தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது; விகிதாச்சார அடிப்படையில்தான் நடக்கும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும்கூட, தேவையில்லாத ஒரு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு தமிழகம் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. மொத்த கடன் தொகை ரூ.9 லட்சம் கோடியாகும்.

இந்தியாவில் யாருமே இவ்வளவு கடன் வாங்கவில்லை. வரலாறு காணாத மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் 200 தொகுதிகளை எப்படித் தருவார்கள்?

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியையும் பிஎம்ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

கூட்டத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *