கோவை:
கோவை ரத்தினபுரியில் நடந்த தி.மு.க. அரசின் சாதனை விளக்க பருக்கூட்டத்தில் தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எனவே வருகிற 2026-ம் ஆண்டிலும் தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் அமையும். 2026-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பதவி ஏற்பு விழாவிற்கு நேரில் வந்து வாழ்த்து கூற வேண்டும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 3 என்ஜின் பொருத்திய கூட்டணி என்று அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் கூறுகிறார்கள். ஆனால் அது சக்கரம் இல்லாத-பெட்ரோல் இல்லாத-மிஷின் இல்லாத என்ஜின்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தைரியம் இல்லாதவர். அண்ணாமலையும் தமிழிசை சவுந்தர்ராஜனும் 2026-ல் கூட்டணி ஆட்சி தான் என்கிறார்கள். கூட்டணி ஆட்சி இல்லை என்று கூற தைரியம் அவர்களுக்கு உள்ளதா?
அமித்ஷா ஆங்கிலத்தில் பேச வெட்கப்பட வேண்டும் என்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்தபோது என்ன மொழியில் பேசிக் கொண்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியை அழைத்து வந்து கூட்டம் நடத்திய போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என்று தைரியமாக அறிவித்தார்.
தி.மு.க. கூட்டணி உறவு குடும்ப உறவு போன்றது.
மதுரையில் பாஜக நடத்தும் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படுவது. உண்மையில் முருகனுக்காக நடந்த மாநாடு, தி.மு.க. அரசு பழனியில் நடத்திய மாநாடு தான். அதில் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் கலந்து கொண்டார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பகுத்தறிவு பிரச்சாரத்தை நிறுத்த மாட்டோம், பக்தி மார்க்கத்தை தடுக்க மாட்டோம் என்று கூறினார். அதேபோல தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் 3000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியது தமிழக அரசு தான். திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.