சேலம்,
டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
வெளிப்படையாக அறிவித்துவிட்டே உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தேன்.
துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். மேலும் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.
என் எழுச்சிப் பயணம் சிறப்பாக இருந்ததாக அமித்ஷா பாராட்டினார். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து அவரிடம் நான் பேசவில்லை.
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என அமித் ஷா ஏற்கெனவே கூறிவிட்டார். கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவில் நான், பாஜகவில் அமித்ஷா கூறுவது தான் இறுதி.
திமுக முப்பெரும் விழாவில் இன்று செந்தில் பாலாஜியை பாராட்டும் இதே முதல்-அமைச்சர்தான், எதிர்க்கட்சியாக இருந்தபோது, ‘செந்தில் பாலாஜியும் அவர் தம்பியும் கொள்ளை, கடத்தல் என கரூரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
இப்போது மட்டும் அவர் புனிதமாகிவிட்டாரா என்ன? அன்று ஊழல்வாதி என கூறிவிட்டு, இன்று அமைச்சர் பதவி கொடுத்தது எப்படி? (செந்தில் பாலாஜியை முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்த வீடியோவை தற்போது காண்பித்தார்) “இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது, சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வந்தார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள். அப்படிப்பட்ட நிலையில் வந்தவர், இன்று இப்படி பேசுவதை ஏற்க முடியாது பிரதமர் சென்னை வந்தபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்து கருப்பு கொடி காட்டினார்.
முதல்-அமைச்சரான பின் பிரதமருக்கு, வெள்ளை கொடி காட்டியவர் மு.க.ஸ்டாலின். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருவேறு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
திமுகவுக்கு எவ்வளவோ தீங்கிழைத்தது காங்கிரஸ். காங்கிரஸ் உடன் உறவு கொள்ளவில்லையா திமுக? ஒரு முதல்-அமைச்சர் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார் இவ்வாறு பேசுவது அவருக்கு அழகல்ல. எங்களை பற்றி விமர்சிக்க ஒன்றுமில்லாததால் எதை பேசுவது என்று தெரியாமல் முதல்-அமைச்சர் விமர்சனம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.