பெங்களூரு:
இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க ஏ அணி விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 255 ரன்களும், தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்களும் எடுத்தன.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 417 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க ஏ அணி 2-வது இன்னிங்ஸை விளையாடியது.
3-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் அந்த அணி, 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தை ஜோர்டான் ஹெர்மான் 15, லெசெகோ செனோக்வானே 9 ரன்களுடன் தொடங்கினர்.
ஜோர்டன் ஹெர்மான் 91, லெசெகோ 77, ஜுபைர் ஹம்சா 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் தெம்பா பவுமா 59 ரன்களும், மார்க்கஸ் ஆக்கர்மேன் 24 ரன்களும் சேர்த்து வீழ்ந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கானர் எஸ்டர்ஹுய்சன் 52 ரன்களும், டியான் வான் வுர்ரன் 20 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
98 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
ஆட்டநாயகனாக தென் ஆப்பிரிக்க ஏ அணியின் மார்க்கஸ் ஆக்கர்மேனும், தொடர்நாயகனாக இந்திய ஏ அணியின் துருவ் ஜூரெலும் தேர்வாயினர்.