ரியாத்:
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வாரமாக ரியாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான ரைபாகினா, முதல் நிலை வீராங்கனையும், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவருமான அரினா சபலெங்காவுடன் மோதினார்.
இதில் ரைபாகினா 6-3, 7-6 (7/0) என்ற செட் கணக்கில் முதல் நிலை வீராங்கனையான சபலெங்காவை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து
சாம்பியன் பட்டம் வென்றார்.
இதுகுறித்து ரைபாகினா கூறும்போது, “இந்த வாரம் எனக்கு நம்ப முடியாத வாரமாக அமைந்தது. இந்தப் போட்டியில் நான் பங்கேற்கும்போது இதில் பட்டம் வெல்வேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எதிர்பாராத வகையில் நான் பட்டம் வென்றதை என்னாலேயே நம்ப முடியவில்லை.
முந்தைய சுற்றுகளில் முன்னிலை வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக், அமந்தா அனிசிமோவா, ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோரை வீழ்த்தியதை மறக்க முடியாது” என்றார். 2022-ல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றவர் ரைபாகினா என்பது குறிப்பிடத்தக்கது.